Thursday, April 23, 2009

நான், அவன், அவள் - ஒரு சிறுகதை

வணக்கம். என் பெயரை நாளை செய்திகளில் தெரிந்து கொள்வீர்கள். இன்று நான் செய்யப் போவது, நமது செய்தி நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்தமானது. பாமரர்கள் இதனை ஒரு கொலை என்றும் கூட சொல்ல வாய்ப்புண்டு. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான். ’அதற்கு’ இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது.

இந்த அரைமணிக்குள், நான் ஏன், எதற்கு, இப்படி என தெரிந்து கொள்ள விருப்பமெனில் உங்களுக்கு நான் அவளைப் பற்றி சொல்லியாக வேண்டும். நான் இன்னும் இந்த இடத்தில் நின்று கொண்டு உங்களிடம் புலம்பிக் கொண்டிருப்பதற்கும் ஒரே காரணம் அவள் மட்டுமே. அவள் - பெயர் இன்னும் தெரிந்தபாடில்லை. அதற்கு என்ன அவசரம். அவளுடன் வாழ இந்த ஜென்மம் முழுவதும் இருக்கிறது. இப்போதைக்கு அவள் பெயர் வசுந்தரா என வைத்துக் கொள்வோம்.

நான் பார்க்கும் போதெல்லாம் வெள்ளையாடை அணிவதாலோ என்னவோ, அவள் அடிக்கடி தேவதைகளை நினைவு படுத்துகிறாள். மனம் என சாதாரணர்கள் காட்டும் இதயம், வெறும் குருதியை பம்ப் செய்யும் ஒரு சிறிய மோட்டார் என மூளைக்குத் தெரிந்தாலும், வசுந்தரா கடந்து செல்லும் போதெல்லாம் இதயம் வலதுபுறமாக வேகமாகத் துடிப்பது போல தோன்றியது.

இதையெல்லாம் கேட்டு எனக்கு வசுந்தராவின் மேல் காதல் என எண்ணிவிடாதீர்கள். எனக்கு அவ்வளவு தைரியம் கிடையாது. அந்த ஈர்ப்புக்குப் இன்னும் எனக்குப் பெயர் பிடிபடவில்லை. இப்போதைக்கு என்னுடைய நோக்கம், இல்லை இல்லை கடமை, வசுந்தராவைக் காப்பாற்றுவது.. அவனிடமிருந்து.

அவனை எனக்கு சிறுவயது முதலே தெரியும். விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவன் எப்போதும் என்னுடனே இருப்பதை யாரும் பொருட்படுத்தியதில்லை. மற்றவர்களைப் பொறுத்த வரை அவன் என்னுடைய உயிர் தோழன். என்னைப் பொறுத்தவரை, அவன் ஒரு பரிச்சயமான எதிரி. நாளடைவில் அவனை எனக்குப் பிடிக்காமல் போனாலும், இன்னும் என்னை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவனைப் பற்றி பிறருக்குத் தெரியாத விஷயங்கள் கூட எனக்குத் தெரியும். அவன், கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் எனக்கு நேர்மாறானவன்.

முதலில் எங்களுடைய பழக்கம் நட்பில் தான் ஆரம்பித்தது. மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்த சிறு சிறு சில்மிஷங்களும், லூட்டிகளும் சுவாரஸ்யமாக இருந்தாலும், நாளடைவில் அவனுடைய தவறுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டி வந்த போது தான் எனக்கு அவனைப் பிடிக்காமல் போனது. நான் பத்தாம் வகுப்பில் தடுமாறி வெளிவருகையில், அவன் மாநில அளவில் பேசப்பட்ட போது தான் அவனை நான் எதிரியாக அங்கீகரிக்க ஆரம்பித்தேன்.

என்னைப் பார்த்தவுடனே பயம் கலந்த பார்வையுடன் விலகிப் போகும் யாவரும் அவனிடம் பேசாமல் போனதே இல்லை. அதில் எனக்குப் பெரிய வருத்தமில்லை. சில முட்டாள்களுடன் பேசி நேரத்தை வீணடிப்பதை விட, மௌனம் சாதிப்பதே மேல். மற்றவர்களுக்கு அவனை நிரம்பப் பிடித்தாலும், என் வசுந்தராவிற்கு அவனை சுத்தமாகப் பிடிக்காமல் போனது. அதனாலேயோ என்னவோ, எனக்கு அவளை மிகவும் பிடித்தது.இவ்வளவு அழகுடன் அறிவும் சேர்வது எவ்வளவு அபூர்வம்.

அதனாலேயே வசுந்தராவை காப்பாற்ற நான் எனக்குள்ளேயே உறுதியெடுத்துக் கொண்டேன். முக்கியமாக அவனிடமிருந்து. வசுந்தரா என்னைப் பார்க்க வரும் போதெல்லாம் அவனும் இருக்கிறான். என்னைக் கடந்து போகையில் மட்டும் வசுந்தராவின் கண்களில் ஒரு மருட்சி. வெளியே சொல்ல முடியாத ஒரு வேதனை. மௌனமாக ஒரு விண்ணப்பம். என்னைப் பொறுத்த வரை அவன் வசுந்தராவை ஏதேனும் செய்யும் வரை விட்டு வைப்பது நல்லதல்ல.

ஆதலினால், என்னவளின் மேல் கொண்டக் காதலினால், என் நண்பனுக்கு ஒரு சிறு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்திருக்கிறேன்.

அவனைக் கொலை செய்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் என்னுடைய திட்டம் மிக எளிமையானது. கத்தியின்றி ரத்தம் பார்க்க ஏதுவானது. வசுந்தராவை நூல் பிடித்த மாதிரி அவன் சுற்றி சுற்றி வருகையில், அவன் காலை இடறி, மாடியில் இருந்து விழ உதவி செய்யப் போகிறேன். என்னைப் பொறுத்தவரை இது இயற்கையான மரணம். கால் இடறி விழுவது இயற்கை தானே. இது எனக்காக இல்லை, வசுந்தராவிற்காக. அவள் இதுவரை என்னிடம் வாய் விட்டு கேட்காவிடினும், இது கூடவா எனக்குப் புரியாது.

அரைமணி ஆயிற்று. வசுந்தராவைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படித்தான். நேரம் போவதே தெரியாது. அருகில் வந்துவிட்டாள். ம்ம். அந்தப் பக்கம் பார்க்கவே தேவையில்லை. அந்த வாசனையே சொல்லிவிடும். பின்னாலேயே அவன். பொறுமை. பொறுமை. அவள் திரும்பட்டும். அவன் அவளுக்குப் பின்னாடியே சென்று கொண்டிருக்கிறான். நான் அவனுக்குப் பின்னாடி.

நான் வருவதை கவனிக்காமல் வசுந்தராவையே பார்த்தவாறு நடந்து கொண்டிருக்கிறான். தவறு செய்து விட்டாய் நண்பா. இந்த முறையாவது நீ என்னைப் பார்த்திருக்க வேண்டும். வசுந்தரா அந்த முனையில் திரும்ப, அவன் வசுந்தராவின் பின்னாடியே செல்ல, அவனுடைய காலைக் கச்சிதமாக நான் இடறி விட, திட்டமிட்டபடியே பதினாறு மாடிகள் அதிவேகமாகப் பயணித்து, கீகீகீகீகீகீகீகீகீழே போய் விழுந்தேன்.

செய்தி:
மருத்துவமனையில் வாலிபர் சாவு. சென்னையில் புறநகரில் இருக்கும் பிரபல தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் சிகிச்சைக்கு கூட்டி செல்லும் வழியில்,மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.