Friday, October 31, 2008

கலோன் - ஜெர்மனி - ஐந்தாம் நாள் - PHOTOKINA - பாகம் 1

ஃபோட்டோகினா ஃபோட்டோகினா அப்படின்னு சொல்லி விமானப் பயணச்சீட்டில இருந்து ஹோட்டல் அறை வரைக்கும் யானை விலை டைனோசர் விலை சொல்றாங்களே, அப்படி என்ன தான் இருக்கு இந்த ஃபோட்டோகினால அப்படின்னு ரொம்பவே ஆர்வமா இருந்திச்சு. அங்க இருந்த விஷயங்களைப் பார்த்து பிரமிச்சுட்டேன். நீங்களும் என்னை மாதிரி போட்டோ புடிக்கற அல்லது ஆர்வம் இருக்கற வகையறான்னா, அங்க ஒரு நாள் பத்தாதுங்க. ஒரு வாரம் வேணும். உங்க கிட்ட காசும் நேரமும் இருந்தா ஒரு வாரம் தங்கி ஃபோட்டோகினாவை சுத்திப் பாத்திட்டு, அப்படியே கலோன்ல கவுச்சி சாப்பிட்டிட்டு, பீர் அடிச்சிட்டே கூத்தடிக்கலாம். இப்ப விஷயத்துக்கு வருவோம்.

அப்படியே ஷாட்டை கட் பண்ணி மெள்ள ஓபன் பண்ணினோம்னா, கலோனோட Köln Messe அரங்கத்தப் பாக்கறோம். பொதுவா பாரிஸ் ஈஃபில் டவர், ரோம் கொலிசியம் (COLLESEUM) இந்த மாதிரி பிரபலமான இடங்களை பார்க்கும் போது எனக்கு அதுக்கு முன்னாடி நின்னு போட்டா புடிச்கனும்னு தோணாது. ஆனா இங்க என்னமோ தோணிச்சு. அப்படி புடிச்சது தான் இந்த போட்டோ.

உள்ள போய் என்ன பாக்கப்போறோம், என்ன பண்ணப்போறோம்னு புரியாம, வழக்கம் போல நிறைய பேர் எந்தப் பக்கம் போனாங்களோ அந்தப் பக்கமா நானும் நண்பன் G.ஷங்கரும் நடந்து போக ஆரம்பிச்சோம். வாசல்லியே வழி மறிச்சு இரண்டு பொண்ணுங்க ஒரு தம்மாத்தூண்டு கேமரா ஒன்னு காமிச்சாங்க. மொழி தெரியாத நாட்ல இப்படி திடீர்னு ஒரு கேமராவ கொண்டு வந்து நீட்டினா நான் என்ன செய்ய. நமக்குத் தெரிஞ்சது, அப்படியே ஒரு போட்டா புடிச்சேன் (போட்டோல பொண்ணுங்களை மட்டும் பாக்காதீங்கண்ணே. அவங்க கையில வச்சிருக்க கேமராவையும் பாருங்க :-). உள்ள போய் பாத்தா இந்த இடம் முழுக்க இப்படி விளம்பரம் பண்றதுக்கு நிறைய MODELS வைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுது.

அங்க உள்ள போய் பாத்தா ஏதோ ஏர்போட்டுக்கு வந்த பீலிங். செக் இன் பண்றதுக்கு ஒரு 20-25 COUNTERS இருந்திச்சு. டிக்கெட்ட சரி பார்த்து உள்ள போறதுக்குள்ளேயே நாம சரியான இடத்துக்கு தான் வந்துருக்கோம்னு தோணிச்சு. சில காட்சிகள் இங்கே.




உள்ளே நுழைஞ்சவுடனே கண்ல பட்டது, கேனன்'னோட(Canon) கோட்டை. அடடா, நாம நிகான் (Nikon) கேமரா வைச்சிருக்கோமெ நம்மள எல்லாம் இவங்க விளையாட்டில சேர்த்துப்பாங்களான்னு கொஞ்சம் சந்தேகத்தோட தான் நுழைஞ்சேன். அங்கே இது மாதிரி இனப் பாகுபாடு எல்லாம் பாக்கற மாதிரி தெரியல. எல்லோரையும் சந்தோசமா உள்ளார கூப்பிட்டு படம் காமிச்சிட்டு இருந்தாங்க. அங்க ஒரு இடத்தில மட்டும் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தியா இருக்க, நம்மளோட ப்ராபபிலிடி (PROBABILITY) தியரி படி இங்க ஏதாவது விஷயம் இருக்கணும்னு நானும் வரிசையில போய் நின்னுட்டேன்.

அங்க பார்த்தா, பத்திரிக்கையிலயும் கடையிலயும் மட்டுமே இதுவரைக்கும் பார்த்திருந்த PRO கேமரா மற்றும் லென்ஸ் எல்லாத்தையும் வரிசையா TRIPOD'ல மாட்டி வைச்சு விளையாடுங்கன்னு ஃபிரீயா விட்டுட்டாங்க. ஆஹா. இந்தக் கேமராவ எல்லாம் தொட்டுப் பார்க்க முடியும்னு தெரிஞ்சவுடனே குஷியாயிடுச்சு. என்னோட முறை வரும் போது, எனக்கு முன்னாடி இருந்தவர், கேமராவில இருந்த மெமரி கார்டை கழட்ட, அட இதுவேறயா அப்படின்னு சந்தோசம் இரண்டு மடங்கு ஆயிடுச்சு. ஓசியில PRO கேமரால படம்புடிக்கறதுன்னா சும்மாவா. என்னோட மெமரி கார்டை எடுத்து அங்க இருந்ததிலேயே பெரிய கேமராவில போட்டு ஷட்டர்ல கை வைக்கும் போது, ஏனோ (தேவை இல்லாம) ஆர்னால்ட் ஸ்வாஸர்நெகர் ஞாபகம் வந்திச்சு.



நான் வச்சிருக்கறது நிகான் கேமரான்னாலும் எனக்கு கேனன் கேமரா மற்றும் லென்ஸ் மேல எக்கச்சக்க மதிப்பு உண்டு. ஆனா, எனக்கு கிடைச்ச அந்த வாய்ப்பு என்னை பெருசா எதுவும் கவர்ந்திடல. மேலே இருக்கற புகைப்படங்கள் எல்லாம் நான் கேனன் கேமரால சுட்டது தான். கடைசி வரைக்கும் போகஸ் சரியா ஆகாத மாதிரியும் கொஞ்சம் பொறுமையா போகஸ் ஆகறமாதியும் தோணிச்சு. நான் ரொம்ப எதிர்பார்த்தேனா, இல்லை அந்த லைட்டிங்க்கு இன்னும் கொஞ்சம் ISO அதிகம் வைச்சுருக்கமான்னு தெரியல.

அப்படியே கீழெ இறங்கி சுத்திப் பாக்கும் போது கேனனோட MACRO லென்ஸ் இருந்திச்சு. MACRO லென்ஸ்'கிறது இந்த சின்னச் சின்ன பூ, புழு, பூச்சி எல்லாத்தையும் பக்காவா பெருசா படம் புடிக்கற லென்ஸ். இந்த MACRO லென்ஸ் பத்தி படிச்சுருந்தாலும் கைல தொட்டதில்லை. ஆனா அதுல படம் புடிக்கிறது, சாம்பார் வடை சாப்பிடற மாதிரி அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. $1000 போட்டு இந்த லென்ஸ் வாங்கினாலும் எருமை மாதிரி பொறுமை இல்லேன்னா ஒரு போட்டா கூட உருப்படியா எடுக்க முடியாது. போகஸ் பண்றதுக்குள்ள கண்ணு பிதுங்கி நான் போட்டிருந்த காண்டாக்ட் லென்ஸெ வெளிய வந்திரும் போல ஆயிடுச்சு. பின்னாடி இருந்தவங்க எல்லாம் விஷயம் புரியாம சலசலக்க, இடத்தைக் காலி பண்ணினேன். அப்படி க்ளிக்கிய ஒன்னு இங்கே.

அப்படியே கெளம்பி வரும் போது கேனனோட லென்ஸ் வரிசையப் பார்த்த்தேன். ஏற்கனவே பத்திரிக்கையில பார்த்ததுதான். இருந்தாலும் கொஞ்சம் உற்றுப் பாக்கும் போது, நடுவில என்னவோ வித்தியாசமா இருந்திச்சு. பக்கத்தில போய் பாத்தா, கேனனோட IS எனப்படுகிற Image Stabilization டெக்னாலஜி எப்படி வேலை செய்யுதுன்னு ஒரு சின்ன மாதிரி (PROTOTYPE) வைச்சிருந்தாங்க. அந்த சிவப்பு பொத்தானை அமுக்கினா IS என்ன பண்ணும்னு கண்ணால பாக்கலாம். அசந்துட்டேன். இப்படி அப்பட்டமா சொன்னாலும் அவ்வளவு ஈசியா காப்பி அடிக்க முடியாது போல. அதான் தைரியமா வைச்சிருக்காங்க.


கொஞ்சம் தள்ளி இதே மாதிரி அவங்க கேமராவோட CROSS SECTION'னை வெட்டி வைச்சுருந்தாங்க. அங்க இன்னும் நுண்ணியமா (DETAILED'டா) பாக்கிற மாதிரி ஒரு பூதக்கண்ணாடி கூட இருந்தது.


கேனனோட இன்னொரு எளிமையான ஆனா அசத்தலான விளக்கம். இது அவங்களோட POINT&SHOOT கேமரால இருக்கற MOTION DETECTION டெக்னாலஜி பத்தி. ஒரு கட் அவுட்டை ஆட்டி விட்டு MD'க்கு முன், MD'க்குப் பின் அப்படின்னு படம் பிடிச்சுக் காட்டி என்னை மாதிரி பாமரர்களுக்கும் புரியறமாதிரி விளக்கினாங்க.

அப்படியே வரும் போது, முதல் போட்டோவில இருக்கற ஒரு கேனன் PRO அவர் எடுத்தப் படங்களைக் காமிச்சு, கேனனோட அருமை பெருமை எல்லாம் விளக்கிட்டு இருந்தாரு.நிகானோட பகுதிக்குப் போறதுக்கு முன்னாடியே என்னை அசர வைச்சது நான் கையில வைச்சிருந்த 18-200mm VR லென்ஸ். அங்க இருந்த UNEVEN LIGHINTING'லேயும் சும்மா அம்சமா இந்தப் பெரியவரா படம் புடிச்சுது. என்னடா இன்னும் இவன் கேனன் கதையவே முடிக்கலேன்னு பாக்கறிங்களா. அது என் தப்பில்லீங்க. அங்க அவ்வளவு விஷயம் இருந்தது.

Thursday, October 2, 2008

மூன்றாம் ஐரோப்பிய பயணம் - ஜெர்மனி - நாட்கள் 1-2-3

சாஃப்ட்வேர் கம்பெனில ப்ராஜெக்ட் அமைவதெல்லாம் அவன் அவன் வாங்கிட்டு வந்த வரம்'னு சொல்லுவாங்க. அமெரிக்கால அரைச்ச மாவையே அரைச்சுகிட்ட இருந்த என்னை திடீர்னு ஆஃபிஸ்(அலுவலக) விஷயமா ஜெர்மனி போயிட்டு வரியான்னு கேட்டாங்க. அட, நிசமாலுமா அப்படின்னு அசட்டுதனமா கேள்வி எல்லாம் கேட்காம, எடுறா வண்டிய'ன்னு கிடைச்ச முதல் லுஃப்தான்ஸா (LUFTANSA) விமானத்தி்ல கிளம்பிட்டேன் (அந்த விமான பணிப்பெண்ணோட புன்சிரிப்பு இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு :-).
தலைக்கு மேல வேலை இருந்தாலும், நமக்கு GOOGLE பண்ண கண்டிப்பா நேரம் இருக்குமே. அதுல பார்த்தப்போ, கலோன் - ஜெர்மனி'ல PHOTOKINA'னு ஏதோ புகைப்படம் சம்பந்தமா ஏதோ நான் போற அதே வாரம் அதே ஊர்'ல நடக்குதுன்னு தெரிஞ்சுது. என்னன்னு சரியா புரியலேன்னாலும் (நமக்கு எல்லாம் எப்ப புரிஞ்சு இருக்கு), போய் பார்த்துக்கலாம்னு கிளம்பி போயிட்டேன்.

ஐரோப்பா'ல பக்கத்து பக்கத்துல இருக்கற பதினெட்டு பட்டி'ல, நம்ம பசங்க ஒரு நாலஞ்சு நாட்ல இருக்காங்க. ஆனா வழக்கம் போல, நான் போற நேரத்திலே அவன் அவன் வேலை வந்து கெளம்பினாலும், அசராம ஒரு இரண்டு நாள் இருந்து கலோன் நகரத்த சுத்தி பாக்க முடிவு பண்ணினேன். அப்போ தான் என்னோட கல்லூரி நண்பன் ஷங்கர் ஆர்ம்ஸ்டர்டாம்'ல ஈ ஓட்டிட்டு இருக்கறதா ஈமெயில்'ல சொல்ல, கடைசி இரண்டு நாளுக்கு ஒரு துணை கிடைச்சுது.

முதல் மூணு நாள் PROJECT, MEETINGS, HOTEL, TAXI, BREWERY, BEER'னு (கடைசியிலெ அந்த கசப்பு மருந்த குடிக்க வேண்டியதா போச்சு) பரபரப்பா போச்சு. ஆஃபிஸ்(அலுவலக) வேலைய விடுங்க. நாம போன வேலைய பார்ப்போம்.ஜெர்மனி மக்களோட தீவிர இனப்பற்று பத்தி நிறைய கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அலுவலகத்தில எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க. ஜெர்மனியோட பிரபலமான சில சாக்லேட் ஐட்டம் எல்லாம் பாசமா குடுத்தாங்க. ஜெர்மனி சாக்லேட்டுக்கும் காஃபிக்கும் ரொம்ப பிரபலங்கிறது எனக்கு அப்போ தான் தெரியும். இங்க படத்தில இருக்கறது நான் கடையில என் அக்கா பொண்ணு காவ்யாக்கு வாங்கின சாக்லேட், மற்றும் ஒரு ஜெர்மனி காஃபி.

நம்பினா நம்புங்க. சின்ன வயசில இருந்து எனக்கு ஆங்கிலத்தில பிடிக்காத ஒரே நொறுக்குத் தீனி CHOCOLATE. ஆனா, யாராவது பிரியமா ஏதாவது கொடுத்தா அதை வேண்டாம்னு சொல்லக்கூடாதுன்னு எங்கத் தாத்தா சொன்னது நினைவுக்கு வர, ஆஃபிஸ்ல மக்கள் குடுத்த சாக்லேடை ஒரு கடி கடிச்சேன். டார்க் சாக்லேட் மாதிரி கசப்பா இருக்கும்னு நினைச்சா, டோனட் மேலெ க்ரீம் தடவின மாதிரி சும்மா பக்குவமா நச்சுனு இருந்தது. அப்புறம் வழிஞ்சிட்டே போய் நாலஞ்சு கேட்டு வாங்கி சாப்பிட்டது வேற கதை.

முதல் மூணு நாள் அலுவலக வேலையா HOTEL BEST WESTERN'ல தங்கி இருந்தேன். அங்க கழிவறையில flush பண்றதுக்கு ஒரு குமிழுக்கு பதிலா ஒரு பட்டன் வைச்சு (2X = STOP) னு ஒரு ஃபார்முலா எழுதியிருந்தது. எங்கயெல்லாம் தியரம் எழுதி ப்ரூவ் பண்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லாம அநியாயத்துக்கு டெக்னிக்கலா இருக்காங்களேன்னு பிரமிப்பா இருந்திச்சு. இந்த பிரமிப்பு கலோன்ல இருந்த டிக்கெட் வெண்டிங் மெஷினை பார்த்த உடனே போயிடுச்சு. கீழெ இருக்கற மாதிரி ஜெர்மனில உள்ளூர்காரங்களே பல பேர் வெண்டிங் மிஷினை முறைச்சுப் பாத்துகிட்டு இருந்தாங்க.
முதல் நாள் சாயங்காலம், ஊர சுத்தி பார்க்க முயற்சி பண்ணிணோம். ஒரு மெல்லிய தூறலோட நடந்து போய் இரயில் நிலையத்தை கண்டு பிடிச்சு, அரைமணி நேரம் போராடியும் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் எங்கள லந்து பண்ண, ஊர சுத்தி பாக்கற ஆசையே போய் பசி கொல்ல ஆரம்பிச்சுடுச்சு. தொழில்நுட்பங்களின் தலைநகரமான ஜெர்மனியிலும் இயந்தரங்கள் மக்கர் பண்ணிணது கொஞ்சம் ஆச்சரியமாவும் ரொம்பவே கடுப்பாவும் இருந்திச்சு.

இரண்டாம் நாள் கலோன்'ல ரொம்ப பிரபலமான FRUH அப்படிங்கற ஒரு BREWERY'ல இரவு சாப்பிட போனோம். ஜெர்மன் மக்கள் தலையே போனாலும், தவறாம பியர் குடிக்கற ஜாதி போல இருக்கு. சாப்பிட உட்கார்ந்தா, நம்ம ஊர்'ல எப்படி தண்ணி வைப்பாங்களோ, அதே மாதிரி கேட்காம அவன் பாட்டுக்கு ஒரு டம்ளர் பியர் வைச்சிட்டு போய்ட்டே இருந்தான். BREWERY போய் தண்ணி கேட்டா கழிவறையத் தான் காமிப்பாங்கன்னு அங்க இருந்த பெரிசு ஒன்று அறிவுறுத்த, மூணு நாளா பியரும் சோடாவும் மட்டும் குடிச்சுட்டு இருந்தேன். வழிய வழிய பியர் குடிச்சிட்டு எல்லோரும் கவலைப்படாம கார் ஓட்டிட்டு போனாங்க.

ஜெர்மானியர்கள் கிடா வெட்டி பொங்க வைக்கறதுல பெரிய ஆளுங்க. இரண்டு மீட்டர் நீளத்துக்கு கொஞ்சம் பெரிய கைமுறுக்கு மாதிரி சுத்தி வைச்சு ஒன்னு இருந்துச்சு. கேட்டா SAUSAGE அப்படின்னாங்க. என்ன தான் கொஞ்ச நாளா வெளி நாட்டில இருக்கறதா கெத்து காமிச்சாலும், மாமிசம்'னா நமக்கு இன்னும் கோழி/ஆடு தான். அதனால, SAUSAGE வேணாம்னு சாய்ஸ்ல விட்டுட்டேன். ஒரு மீட்டர் நீளத்துக்கு PAPER ROAST கணக்கா பெரிய HOT DOG மாதிரி இன்னொரு ஐட்டம் இருந்திச்சு. மினி மீல்ஸ் போல. இதுல எல்லாம் தப்பிச்சு இருந்த ஒரே ஒரு கோழி/மீனை பிடிச்சாலும், குடிக்க நல்ல தண்ணி கிடைக்கலை. ஆனா வகை வகையா இல்லாட்டியும், ரவுண்டு கட்டி சாப்பிடற அளவுக்கு இருந்திச்சு.


பொதுவா ஜெர்மனியில இறங்கினவுடனே ஒரு முன்னேறிய நாட்ல இருக்கற உணர்வு இருந்தது. 2005'ல நான் EWR (NEWARK, NJ) விமான நிலையத்தில இறங்கினப்போ இந்த மாதிரி எல்லாம் தோணிண மாதிரி ஞாபகம் இல்லை. AUTOBANN'ல போகும் போது வேகத்தை பத்தி யாரும் (காவல்துறை கூட) கவலைபட்ட மாதிரி தெரியலை. கொஞ்சம் குறுகலா இருந்ததே தவிர, ஜெர்மனியோட A80'கும், அமெரிக்காவோட I80'கும் பெரிய வித்தியாசம் இல்லை (சும்மா சொல்ல கூடாது. அமெரிக்கா நல்லாவே காப்பி அடிச்சுருக்காங்க).
டாக்ஸியா இருந்தாலும், MERCEDES BENZ'ல போகும் போது சிலிர்த்தது. எல்லாம் BRAND VALUE பண்ற வேலை. எல்லா ஊர்லயும் டாக்ஸிக்காரங்க ஏன் அவசரத்துக்கு பொறந்தவங்களாவே இருக்காங்கன்னு தெரியலே. ஸ்பீட் லிமிட் இல்லாத ரோட்'ல பென்ஸ் கார்'ல சும்மா புகுந்து புகுந்து போகும் போது செம ஜாலியா இருந்தது. என் கூட வந்த அமெரிக்க நண்பர் ஒருத்தர் பாவம் கர்த்தரை வேண்டிகிட்டே(டாக்ஸிக்காரனைத் திட்டி கிட்டே) வந்தாரு.
மூணாவது நாள் சாயங்காலம் சந்தைக்கு போனோம். கலோனோட சரித்திர சின்னமான DOM'a (ஒரு பெரிய கிறித்துவ தேவாலயம்) சுத்தி நிறைய கடைகள் இருந்திச்சு. இருட்டில சரியா புரியலேன்னாலும், அந்த இடம் பரபரப்பா நம்ம ஊரு கடைத்தெரு மாதிரின்னு மட்டும் தெரிஞ்சுது. அடுத்த நாள் முழுதும் அங்கே தான் சுத்த போறேன்னு அப்போ எனக்கு தெரியலை.

border="0" alt="Free Hit Counters" />


HTML Counter